அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 32½ பவுன் நகைகள் கொள்ளை

வானூர் அருகே அரசு பள்ளிக்கூட ஆசிரியர் வீட்டில் 32½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அவர் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றதை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Update: 2018-09-17 22:00 GMT
வானூர்,

வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டை சேர்ந்தவர் மாதவன் (வயது 53). புதுவை மாநிலம் ஆலங்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 14-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் மாதவன் திருப்பதிக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றபோது, பீரோ இருந்த அறை உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 32½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு மாதவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு ரூ.7½ லட்சம் ஆகும்.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று, விசாரணை நடத்தினர். விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர் ஸ்ரீதர் அங்கு வந்து தடயங்களை சேகரித்தார்.
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. பக்கத்து வீட்டில் உள்ள மாமரத்தை மோப்பநாய் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மாதவன் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றதை நோட்டமிட்டு தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள், பக்கத்து வீட்டில் உள்ள மாமரத்தின் மீது ஏறி மாதவன் வீட்டு மாடியின் பின்பக்கம் குதித்து, அங்குள்ள இரும்பு கதவு பூட்டை உடைத்து வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளை நடந்த அறையில் இருந்த மற்றொரு இரும்பு பீரோவை மர்ம ஆசாமிகள் திறக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியாததால் விட்டுச்சென்றனர். இதனால் அந்த பீரோவில் இருந்த நகைகள் தப்பின.

கொள்ளை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை நடந்த வீட்டின் மாடி வழியாக பீரோ வைத்திருக்கும் அறைக்கு வரும் வழி வெளிநபர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே அந்த வீட்டில் கட்டுமான பணி, பிளம்பர் வேலை செய்தவர்களுக்கு அதுபற்றி தெரிந்து இருக்க வேண்டும். அவர்கள் தான் இந்த கைவரிசையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைத்தொடர்ந்து அவர்களின் விவரங்களை சேகரித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் கொள்ளை நடந்த சம்பவம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்