தர்மபுரி மாவட்டத்தில் ரூ.3.97 கோடி மதிப்பில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் ரூ.3.97 கோடி மதிப்பில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் ராஜமனோகரன் தெரிவித்தார்.

Update: 2018-09-18 01:40 GMT
தர்மபுரி, 

தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் ஏ.கொல்லஅள்ளி, வெள்ளோலை, சோலைக்கொட்டாய் கிராமங்களில் தமிழக அரசின் சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழிகள், விலையில்லா வெள்ளாடுகள், விலையில்லா கறவை மாடு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகளை கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் ராஜமனோகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்கும் வகையில் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2011-12-ம் ஆண்டு முதல் இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 23 ஊராட்சிகளில் 1,150 பயனாளிகளுக்கு ரூ.4.23 கோடி மதிப்பிலான கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 11 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ளதால் பயனாளிகளின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.

இதேபோன்று ஊரக பகுதிகளிலுள்ள ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் பொருட்டு பெண் பயனாளிகளுக்கு இலவசமாக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட 2011-12-ம் ஆண்டு முதல் இதுவரை தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 27,199 பயனாளிகளுக்கு ரூ.35.09 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 796 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் ஆடுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதால் பயனாளிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 1,010 பயனாளிகளுக்கு ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 500 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதால் இந்த மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பிரபலமடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் வேடியப்பன், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு துணை இயக்குனர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்