எளம்பலூர் இந்திரா நகர் பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

எளம்பலூர் இந்திரா நகர் பகுதிக்கு குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-18 01:44 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். பெரம்பலூர் தாலுகா எளம்பலூர் 10-வது வார்டுக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது பெண்கள் திடீரென்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து, காலிக்குடங்களை தலையில் வைத்தவாறு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் கூறுகையில், எளம்பலூர் கிராமத்தில் உள்ள இந்திரா நகர் பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்கிற அவல நிலை ஏற்பட்டுள்ளது. சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுத்தபாடில்லை. மேலும் எங்கள் பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை. சீரான குடிநீர் வினியோகம் செய்யவும், தெரு விளக்குகள் எரிவதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன் தலைமையில் அதிகாரிகள் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் சீராக வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் முற்றுகை போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு, அவர்களின் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று இது தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமியிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், நக்கசேலத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நாரை கிணறு என்கிற குளத்தில் தனி நபர்களின் சட்ட விரோத ஆக்கிரமிப்புகள், விவசாய மின் இணைப்புகளை அகற்றி, நாரை கிணற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். குன்னம் தாலுகா கொத்தவாசல் காலனி தெரு பொதுமக்கள் கொடுத்த மனுவில், கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருவதுடன், நுழைவு வாயில் கட்டப்படவுள்ளது. இந்த நுழைவு வாயில் காலனி தெருவில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு தூரமாக அமையவுள்ளது. இதனால் பள்ளிக்கு நடந்து வரும் காலனி தெரு மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுவார்கள். எனவே காலனி தெருவிற்கு அருகே உள்ளவாறு பள்ளி நுழைவு வாயில் கட்டப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்