வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது 26 பவுன் நகைகள் மீட்பு

நெல்லையில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 26 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

Update: 2018-09-18 21:45 GMT
நெல்லை, 


நெல்லை மாநகர பகுதியில் நடந்து செல்லும் பெண்களிடமும், பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் பெண்களிடமும் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழிப்பறியில் ஈடுபடுபவர்களை பிடிக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்தர் குமார் ரத்தோட் உத்தரவின் பேரில், போலீஸ் துணை கமிஷனர் (குற்றப்பிரிவு) பெரோஸ்கான் அப்துல்லா அறிவுரையின் படி, உதவி கமிஷனர் மெக்லரின் எஸ்கால் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். தொடர்ந்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், பாளையங்கோட்டை பெருமாள்புரம் திருமால்நகர் குடிசை மாற்று வாரிய காலனியை சேர்ந்த அப்துல் ரப்பானி (வயது 23), பாளையங்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்த செய்யது (31), நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர் (34), மானூர் அருகே உள்ள பள்ளமடை வடக்கு தெருவை சேர்ந்த ஆதிமூலம் (42) ஆகியோர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்கள் 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பாளையங்கோட்டை, தியாகராஜநகர், பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெண்களிடம் சங்கிலி பறித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 26 பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. பின்னர் அவர்களை போலீசார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

தீவிரமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்தர்குமார் ரத்தோட் பாராட்டினார். 

மேலும் செய்திகள்