அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் - முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

இடைத்தேர்தல் மூலம் அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.

Update: 2018-09-18 23:30 GMT

திருப்பரங்குன்றம்,

குட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலகக்கோரி தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி திருப்பரங்குன்றத்தில் மதுரை மாநகர், மாவட்ட தி.மு.க. மற்றும் புறநகர் தெற்கு, வடக்கு தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசை கண்டித்தும், குட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலகக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோ.தளபதி தலைமை தாங்கினார். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட மூர்த்தி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:–

ஜெயலலிதா மறைவுக்கு முன்பும், பின்பும் எதிலும் ஊழல், எங்கும் ஊழலாக அ.தி.மு.க. ஆட்சி உள்ளது. சத்துணவு முட்டை டெண்டர், குட்கா என்று ஊழலின் சாம்ராஜ்ஜியமாக அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது. மதுரையில் தி.மு.க. ஆட்சியில் பாண்டிக்கோவில் அருகே போடப்பட்ட ரிங்ரோடு பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து இங்கு சைக்கிள் கம்பெனி வரப்போகிறதா? என்று கேட்டேன். சைக்கிள் கம்பெனி வரவில்லை, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக மக்களுக்கு கொடுப்பதற்காக சைக்கிள்களை நிறுத்தி வைத்துள்ளனர் என்று சொன்னார்கள்.

அமைச்சர் உதயக்குமார் சைக்கிள் கொடுக்கிறார் என்றால் அதற்கான பணம் எங்கு இருந்து வந்தது? ஊழல் செய்து, பகட்டு வே‌ஷம் போட்டு சைக்கிள் கொடுப்பது மக்களிடம் எடுபடாது. தி.மு.க. ஆட்சியில் முதியோர்களுக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவி தொகையை நிறுத்திவிட்டு, சேலை கொடுப்பதும் மக்களிடம் எடுபடாது. ரே‌ஷன் கடைகளில் மக்களுக்கு முறையாக பொருட்கள் கிடைக்கவில்லை. சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் நியமனத்திற்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை லஞ்சம் வழங்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தபோதே அவர்களை எதிர்த்து அரசியல் செய்தோம். திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக போராடி வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. அரசின் ஊழல் ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்

மேலும் செய்திகள்