அ.தி.மு.க. அரசு தமிழகத்தை பேரழிவுக்கு கொண்டு சென்று விட்டது

அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து, தமிழகத்தை பேரழிவுக்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கொண்டு சென்றுவிட்டனர் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

Update: 2018-09-18 21:37 GMT
திண்டிவனம், 

திண்டிவனத்தில் உள்ள வ.உ.சி. திடலில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திண்டிவனத்தில் நேற்று அ.தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவரான பிறகு நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டம் இதுவாகும். தமிழகத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து சூறையாடிக்கொண்டு இருக்கின்றனர். கேரளாவில் மழையால் ஏற்பட்ட பாதிப்பைவிட, தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்பை விட அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தமிழகத்தை பேரழிவுக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.
அத்தனை துறைகளிலும் ஊழல்கள் நடந்துள்ளது. ஏன் குப்பைகளில் கூட ஊழல் நடக்கிறது. ஆட்சியாளர்கள் சொல்வதை செய்யாத அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, அவர்களை தொல்லைக்கு உள்ளாக்குகிறார்கள்.

மக்கள் நலனை பேணி காப்பது தான் ஒரு அரசின் கடமையாகும். ஆனால் இவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்வதில்லை. மக்கள் ஓட்டு போட்டு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆகவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாகவே அவர் முதல்-அமைச்சர் ஆகி உள்ளார்.
இவரது ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் குட்கா ஊழலில் சிக்கி உள்ளார். ஆனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல், கட்சியில் பதவியை வழங்கி இருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

உடல் உறுப்புகள் தானம் என்பது சிறந்த ஒன்றாகும். இதில் கூட உறுப்புகள் ஏழைகளுக்கு சென்றடையாமல் 95 வெளிநாட்டினருக்கு அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டுள்ளது. இதில் விஜயபாஸ்கர் வெளிநாட்டினரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர்கள் அனைவரும் ஊழல் செய்து வருகிறார்கள். இதன் மூலம் ஊழல்களின் ராஜாவாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோன்று பெண்களை பற்றி தவறாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரும் கைது செய்யப்படவில்லை. அதேபோன்று தான் தற்போது பா.ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா காவல்துறை, உயர்நீதிமன்றம் பற்றி அவதூறாக பேசியும் கைது செய்யப்படவில்லை. ஆனால் கோஷம் போட்ட மாணவி ஒருவர் அதே இடத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுகிறார்.

சென்னை-சேலம் 8 வழிசாலை அமைப்பதற்கான டெண்டர், முதல்-அமைச்சரின் உறவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் கேட்ட போது, என்னுடைய உறவினர்கள் தொழில் செய்ய கூடாதா என்று முதல்-அமைச்சர் கேட்கிறார்.

எந்த திட்டத்திற்கும் உலக வங்கியில் இருந்து கடன் உதவி பெற்று செய்யப்படும் போது, அதில் முக்கிய புள்ளிகளின் உறவினர்கள் இருக்க கூடாது என்று விதிமுறை உள்ளது. இதை மீறி டெண்டர் கொடுத்துள்ளது. இதை நான் கூறவில்லை, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி. தினகரன் தெரிவிக்கிறார்.

தமிழகத்தில் எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. தொழிற்சாலைகளும் புதிதாக அமைக்கப்படவில்லை. வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் இருக்கிறது.

பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்பாக பலகோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் என்றார். ஆனால் அவரும் செய்யவில்லை. மத்திய, மாநில அரசுகள் இணைந்து பொதுமக்களை பாதிக்கப்படும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்