எச்.ராஜாவை கைது செய்யக்கோரி அறநிலையத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எச்.ராஜாவை கைது செய்யக்கோரி திருவாரூரில் அறநிலையத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-18 21:42 GMT
திருவாரூர், 


பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே எச்.ராஜா, கோவில் ஊழியர்களை பற்றி அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பணியாற்றும் ஊழியர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு தியாகராஜர் கோவில் பணியாளர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தின் ஊழியர்கள் நேற்று எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை எழுத்தர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
இதில் தியாகராஜர் கோவில் பணியாளர்கள் குமார், அறிஞர், நந்தகுமார், இளங்கோ, உலோக பாதுகாப்பு மைய ஊழியர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அறநிலையத்துறை ஊழியர்களை பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது. எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்