ரிஷிவந்தியத்தில் போலி டாக்டர் கைது

ரிஷிவந்தியத்தில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-09-18 21:30 GMT
ரிஷிவந்தியம், 


விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராமமூர்த்தி(வயது 32). டி.பார்ம் படித்து முடித்த இவர் தனது வீட்டு முன்பு மருந்துக்கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் மருத்துவ படிப்பு படிக்காமலேயே தனது மருந்து கடையில் உள்ள ஒரு தனிஅறையில் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு அலோபதி சிகிச்சை அளிப்பதாக விழுப்புரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்அடிப்படையில் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சுந்தர்ராஜன், ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் சரஸ்வதி ஆகியோர் கொண்ட குழுவினர் ராமமூர்த்திக்கு சொந்தமான மருந்துக்கடையில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது ராமமூர்த்தி, நோயாளி ஒருவருக்கு அலோபதி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் ராமமூர்த்தியை ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராமமூர்த்தியை கைது செய்ததோடு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்