ரவுடி கொலை வழக்கில் கோவை கோர்ட்டில் 3 பேர் சரண்

திண்டுக்கல்லில் பிரபல ரவுடி பாஸ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கோவை கோர்ட்டில் 3 பேர் சரண் அடைந்தனர்.

Update: 2018-09-18 21:30 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் பொன்மாந்துறையை சேர்ந்த ரபேல் மகன் பாஸ்கர் (வயது 36). இவர் மீது 2 கொலை வழக்குகள், போலீஸ் ஏட்டுவை வெட்டிய வழக்கு உள்பட மொத்தம் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியான இவர், கடந்த சில மாதங்களாக சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

பின்னர் நேற்று முன்தினம் மாலை திண்டுக்கல் தோமையார்புரத்துக்கு மோட்டார்சைக்கிளில் வந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், அவரை சரமாரியாக வெட்டியது. உயிருக்கு பயந்து அருகில் இருந்த வீட்டுக்குள் சென்று பாஸ்கர் ஒளிந்தார். ஆனால், கதவை உடைத்து உள்ளே புகுந்த அந்த கும்பல் பாஸ்கரை, வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழிக்குப்பழியாக பாஸ்கரை கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்கர் தரப்பினரால் கொல்லப்பட்ட ராம்குமாரின் கூட்டாளிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கிடையே பாஸ்கர் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் தீப்பாச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரன் மகன் சரவணக்குமார் (26), ஒட்டன்சத்திரம் முத்துசாமி மகன் சண்முகவேல் (29), பள்ளப்பட்டி குமரேசன் மகன் ஸ்ரீரங்கன் (21) ஆகியோர் கோவை 8-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேநேரம் கொலையில் தொடர்புடைய முக்கிய நபர்கள் 3 பேர் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அந்த 3 பேரும் கோர்ட்டில் சரண் அடையும் முன்பு கைது செய்வதற்கு போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதற்காக நேற்று கோவையில் சரண் அடைந்த 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்மாந்துறையில் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக ராம்குமார், பாஸ்கர் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2 கோஷ்டிகளாக பிரிந்து தனித்தனியாக செயல்பட தொடங்கினர். ஒரு கட்டத்தில் மோதல் உச்சம் அடைந்தது.

இதையடுத்து திண்டுக்கல்லில் பட்டப்பகலில் ராம்குமார் வெட்டி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பாஸ்கர், சேசுராஜ், ஜான்பீட்டர், சிவக்குமார் உள்பட 6 பேர் மீது திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் சேசுராஜ், சிவக்குமார் ஆகியோரை ராம்குமாரின் கூட்டாளிகள் அடுத்தடுத்து கொலை செய்தனர்.

மேலும் ஜான்பீட்டர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடும்போது தவறி விழுந்து காயமடைந்து இறந்தார். இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஸ்கர் உயிருக்கு பயந்து சென்னைக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று முன்தினம் அவர் ஊருக்கு வந்த போது கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, தலைமறைவாக இருக்கும் 3 பேரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்