கல்பாக்கம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்

கல்பாக்கம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-18 23:01 GMT
கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த லத்தூர் ஒன்றியம் கூவத்தூர் கிராமத்தில் புதுக்காலனி, பெரும்பள்ளம், கொல்ல மேடு, பழைய காலனி, நாவக்கால், மலையூர், கீழார், கொல்லை, கூவத்தூர், பஜார் உள்பட பகுதிகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அரசு ஆரம்ப பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் நிலையம், அரசு வங்கிகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது.

இதனால் அந்த பகுதியினர் சற்று தொலைவில் உள்ள தட்டாம்பட்டு, கானத்தூர், காத்தான்கடை போன்ற பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

குடிநீர் வழங்காதது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அந்த பகுதி மக்கள் புகார் செய்தனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூர் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், கொடூர் வருவாய் ஆய்வாளர், பாலசந்தர், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது புரட்சி பாரதம் கட்சி மாநில நிர்வாகி சகா தேவன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் மூர்த்தி மற்றும் பொதுமக்கள் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் குழந்தைகள், பெரியவர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்