திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் மீனவர்கள் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

ஊரை விட்டு தங்களை ஒதுக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் குடும்பத்தினருடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

Update: 2018-09-20 08:00 GMT
தூத்துக்குடி, 

ஊரை விட்டு தங்களை ஒதுக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் குடும்பத்தினருடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

குடும்பத்துடன் மீனவர்கள்...

திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரை சேர்ந்த மீனவர்கள் சிலர் குடும்பத்துடன் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நாங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். திருச்செந்தூர் அமலிநகரில் கிராம நிர்வாக கமிட்டி அமைத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வந்தோம். இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நாங்கள் வேறு ஒரு அமைப்பை உருவாக்கி மக்களுக்கு நல்ல காரியங்களை செய்து வருகிறோம்.

ஊரை விட்டு ஒதுக்கி...

இந்தநிலையில் ஊரில் இருந்து 11 வல்லக்காரர்கள் உள்ளிட்ட சிலரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தும், ஊர்விஷயங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் ஊர்கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அதனை தண்டக்காரன் மூலம் வாய்மொழியாக அறிவிப்பு செய்து எங்களை சமுதாய புறக்கணிப்பு செய்து உள்ளனர்.

இதனால் நாங்கள் குடும்பத்தினருடன் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். ஆகையால் தாங்கள் தலையிட்டு எங்கள் அடிப்படை உரிமைகளை பறித்து சமுதாயத்தை விட்டு ஒதுக்கி தீண்டாமையை கடைபிடிக்கும் ஊர்கமிட்டியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் எங்களுக்கு வழங்கி உள்ள உரிமையை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்