பள்ளி மாணவன் மர்மசாவு: உறவினர்கள் சாலை மறியல்

கச்சிராயப்பாளையம் அருகே மாணவன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை அடக்கம் செய்ய மறுத்து அவனது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-20 21:30 GMT
கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையத்தை சேர்ந்தவர் கவியரசு. இவரது மகன் ரவீந்திரன்(வயது 13). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த ரவீந்திரன் நேற்று முன்தினம் காலை, இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றான். பின்னர் நீண்ட நேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையே ரவீந்திரன், வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தடியில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தான். இதை பார்த்த பெற்றோர் அவனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ரவீந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து ரவீந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை ரவீந்திரனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், ரவீந்திரன் சாவில் மர்மம் உள்ளது. அதனால் உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை கண்டறிய வேண்டும், மோப்ப நாயை வரவழைத்து துப்பு துலக்க வேண்டும், அதுவரை ரவீந்திரன் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்று கூறினர். அதற்கு போலீசார் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

இதனை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் சண்முகம் (சின்னசேலம்), ரஜினிகாந்த் (கச்சிராயப்பாளையம்), ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்