அடையாறு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம் எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-20 22:30 GMT
தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர், திருமுடிவாக்கம், அனகாபுத்தூர், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றது.

வெள்ளத்தில் சிக்கியவர்கள், ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அடையாறு ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளே இந்த வெள்ள பாதிப்புக்கு காரணம் என்பதால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், காஞ்சீபுரம் மாவட்ட வெள்ள தடுப்பு கண்காணிப்பு அலுவலருமான அமுதா, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

அடையாறு ஆற்றங்கரையில் உள்ள பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் தற்போது அகற்றப்பட்டு உள்ளது. அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள 676 குடியிருப்புகளை அகற்ற, ‘பயோ மெட்ரிக்’ முறையில் கணக்கெடுப்பு நடத்தி, முதல் கட்டமாக, 150-க்கும் மேற்பட்ட வணிக சம்பந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சில இடங்களில் வழக்கு கள் காரணமாக ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் பணி தடைப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் கணபதி நகரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள 46 ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் பணி நேற்று பல்லாவரம் தாசில்தார் பெனடின் தலைமையில் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்தவர்களுக்கு சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஆணைகள் வழங் கப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்தவர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு பெரும்பாக்கத்தில் தங்களுக்கு வழங் கப்பட்ட மாற்று வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர், ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், கர்ணன் உடலில் தண்ணீரை ஊற்றி அவரை சமாதானப்படுத்தினர்.

ஆக்கிரமிப்பு வீடுகளில் இருப்பவர்கள் அனைவரையும் பெரும்பாக்கத்தில் உள்ள மாற்று வீடுகளுக்கு அனுப்பிவிட்டு, அனைத்து ஆக்கிரமிப்புகளும் இடித்து அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்