திண்டுக்கல்: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-22 22:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி 7-வது வார்டு கிழக்கு கோவிந்தாபுரம், சோலை இல்லம், கருமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த பகுதிகளை சேர்ந்த பெண்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் தங்களுடைய பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முற்றுகையிட்டனர். உடனே மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் பெண்கள் முற்றுகையை கைவிட்டு திரும்பி சென்றனர். ஆனால், நேற்று காலை வரை அந்த பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திண்டுக்கல் மெயின்ரோட்டில் காமராஜர் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் சாலையில் காலிக்குடங்களை வைத்து அமர்ந்து கொண்டனர். இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பழனி, கோவை செல்லும் பஸ்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள், அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 7-வது வார்டுக்கான புதிய குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வழங்க முடியவில்லை. எனவே, லாரி மூலம் குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதை ஏற்றுக்கொள்ள மறுத்த பொதுமக்கள், பழைய குழாய் மூலம் மீண்டும் குடிநீர் வழங்கும்படி தெரிவித்தனர். ஆனால், பழைய குழாய் அடைக்கப்பட்டு விட்டதால், புதிய குழாய் சரிசெய்யப்பட்டு விரைவில் குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன்பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்