உஷாரய்யா உஷாரு..

அதிக பரபரப்பில்லாத அந்த தெருவில் நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனம் ஒன்று இருக்கிறது. அங்கு இந்த இளைஞன் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான்.

Update: 2018-09-23 06:29 GMT
திக பரபரப்பில்லாத அந்த தெருவில் நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனம் ஒன்று இருக்கிறது. அங்கு இந்த இளைஞன் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. பெரும்பாலான நாட்கள் வீட்டில் இருந்து மதிய உணவு எடுத்துவரமாட்டான். மதிய நேரத்தில் தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து, இரண்டு தெருக்களை கடந்து சிறிய ‘மெஸ்’ ஒன்றுக்கு சாப்பிட செல்வான்.

அன்றும் சாப்பிடுவதற்காக மெஸ்ஸை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தான். எதிர்முனையில் மூன்று பெண்கள் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அதில் இருவர் ஜீன்ஸ்- பேண்ட் அணிந்த இளம் பெண்கள். மூன்றாமவர் நடுத்தர வயது பெண். மதிய நேரம். கடுமையான ெவயில். எல்லோரும் ஓட்டமும், நடையுமாய் கடந்துபோவதிலே குறியாக இருந்ததால் பலருடைய பார்வையும் அந்த மூவர் மீதும் அவ்வளவாக பதியவில்லை. அவர்களிடம் விலை உயர்ந்த செல்போன்கள் இருந்தன. நடுத்தர வயது பெண் யாருடனோ போனில் பேசிக்கொண்டே நடந்து வந்தாள்.

நகைக்கடன் நிறுவன இளைஞனும்- அந்த மூன்று பெண்களும் நேருக்கு நேராக நெருங்கிவிட்டார்கள். மிக நெருக்கமாக வந்து உரசிக்கொள்வது போல் இருந்்தது. திடீரென்று ஒரு கூச்சல். அந்த நடுத்தர வயது பெண், ‘டேய் நீ எல்லாம் மனுஷனா.. மிருகமா..! அழகான பொண்ணுங்களை நீ பார்த்ததே இல்லையா. இப்படி நடு ரோட்டில்வைத்து ெதாடக்கூடாத இடத்தில பெண்களை தொடுறியே.. யாருமே தட்டிக்கேட்க மாட்டீங்களா..’ என்று அந்த இளைஞனை நோக்கி கத்த, அங்கும் இங்குமாக காணப்பட்ட அனைவரும் அவர்களை திரும்பிப் பார்த்தார்கள்.

அதற்குள் அந்த இளைஞனின் தலைமுடியை நடுத்தர வயது பெண் கொத்தாகப் பற்றி உலுக்க, இளம் பெண்கள் இருவரும் அவன் சட்டையை பிடித்து இழுத்து கிழிக்க, கூட்டம் கூடிவிட்டது. ‘பட்டப்பகலிலே பொண்ணுங்க மேலே கையை வைச்சிட்டான்ப்பா..’ என்றபடி, ஆட்டோ டிரைவர்கள் இருவர் ஓடிப்போய் அவனை தாக்க முயற்சிக்க, எங்கிருந்தோ வந்த நாலைந்து பேர் உள்ளே புகுந்து, எதிர்பாராத தாக்குதல் நடத்தினார்கள். அந்த இளைஞனின் மூக்கு உடைந்து, உதடு கிழிந்து ரத்தம் வழிந்தது. அவனை கீழே தள்ளி முரட்டுத்தனமாக உதைத்தார்கள்.

அவன் நிலைகுலைந்து உயிருக்கு பயந்து கதற, சிலர் வந்து அவனை காப்பாற்ற முயற்சித்தனர். ‘என்ன தப்பு பண்ணினான்?’, ‘ஏன் இப்படி அடிச்சீங்க?’ என்று அவர்கள் தட்டிக்கேட்க ஆரம்பித்ததும், அடித்தவர்கள் பின்வாங்கினார்கள். ‘நான் எந்த தப்பும் பண்ணலை..’ என்று அவன் வலியில் கத்திக்கொண்டிருக்க, அவனை அம்போ என விட்டுவிட்டு அடித்தவர்கள் எல்லாம் ஆளுக்கொரு பக்கமாக பதுங்கிவிட்டார்கள். அப்போது ஒரு ஆட்டோ அந்த பக்கமாக வர, அந்த பெண்கள் அதில் ஏறி பறந்துவிட்டனர். சிறிது நேரத்தில், விஷயத்தை கேள்விப்பட்டு நகைக்கடன் நிறுவன ஊழியர்கள் இருவர் ஓடோடி வந்து, அந்த இளைஞனை மீட்டுச் சென்றனர்.

ஒரு வாரம் கடந்திருக்கும். அந்த பகுதியில் உள்ள பங்களா வீட்டுக்காரர் தனது வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி.யில் முந்தைய நாட்களில் பதிவான காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த இளைஞனை பெண்கள் தாக்கிய காட்சியும் அதில் இடம்பெற்றிருந்தது.

அந்த இளைஞன் அருகில் வேண்டும் என்றே அந்த பெண்கள் உரசிச்செல்வதும், விலகி செல்ல முயன்ற அவனைப் பிடித்து இழுத்து ‘தொடக்கூடாத இடத்தில் தொட்டுவிட்டான்’ என்று கத்திக்கொண்டே அடிப்பதும் தெரிந்தது. பெண்கள் தாக்குதலை ஆரம்பித்ததும் சில குண்டர்கள் திடீரென்று தோன்றி அவனை கண்மூடித்தனமாக தாக்குவதும், பின்பு பதுங்கி ஆளுக்கொரு பக்கமாக மறைவதும் சி.சி.டி.வி. காட்சியில் தெரிந்தது. அந்த பெண்களும், குண்டர்களும் திட்டமிட்டு அப்பாவி இளைஞனை தாக்கியிருப்பது அவருக்கு புரிந்தது.

உடனே அந்த காட்சிகளை போலீசிடம் பகிர்ந்துகொண்டார். அவர்கள் விசாரித்துவிட்டு, ‘அந்த இளைஞனுக்கும், அவனது முன்னாள் காதலிக்கும் ஏதோ பகை இருந்திருக்கிறது. அவள், இந்த ‘பெண் குண்டர் களுக்கு’ பணத்தைக் கொடுத்து அடிக்கவைத்து பழைய பகையை தீர்த்திருக்கிறாள்’ என்று கூறியிருக்கிறார்கள்.

நாம் சொல்ல வர்ற விஷயம் என்னன்னு புரிஞ்சுதா? கூலிப்படை வேலைக்கு இப்போ பெண்களும் வந்திருக்காங்க! பார்த்து கவனமாக நடந்துக்குங்க..!!

- உஷாரு வரும்.

மேலும் செய்திகள்