மத்தியில் பா.ஜனதா அரசை அகற்ற அனைவரும் சேர்ந்து போராட வேண்டும் - அமர்ஜித் கவுர் பேச்சு

மத்தியில் பா.ஜனதா அரசை அகற்ற அனைவரும் சேர்ந்து போராட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் அமர்ஜித் கவுர் திருப்பூரில் நடந்த மாநாட்டில் பேசினார்.

Update: 2018-09-23 23:00 GMT

திருப்பூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் அரசியல் சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு வேலூர், சென்னை, வேதாரண்யம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து வாகன பிரசாரம் பயணம் தொடங்கி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்கள் வழியாக சென்று நேற்று திருப்பூர் ராயபுரத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு அரசியல் எழுச்சி மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் ரவி வரவேற்றார்.

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் அமர்ஜித் கவுர் பேசியதாவது:–

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம், பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜனதா அரசு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை. தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை பிரதமர் மோடி கூறி வருகிறார். மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது 1 ரூபாயில் 43 காசு உயர்மட்ட பணக்காரர்களுக்கு செலவு செய்யப்படுவதாக மோடி குற்றம் சாட்டினார். ஆனால் பா.ஜனதா அரசு வந்த பிறகு 1 ரூபாயில் 73 காசு உயர்மட்ட பணக்காரர்களுக்கு செலவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் 1 சதவீதம் இருக்கும் பணக்காரர்களுக்கு இவ்வளவு செலவு செய்யும் அரசாக பா.ஜனதா அரசு உள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் கார்டு வேண்டாம் என்று எதிர்த்த மோடி, இப்போது ஆதார் கார்டு அனைத்துக்கும் தேவை என்று கூறுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் ஜி.எஸ்.டி. 16 சதவீதம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மோடி, இப்போது 28 சதவீதத்தை அமல்படுத்தி இருக்கிறார்.

நாங்கள் நாட்டை எதிர்க்கவில்லை. நாட்டில் நடக்கும் அரசை எதிர்க்கிறோம். நாங்கள் தேச விரோதிகள் இல்லை. எங்களை பார்த்து மோடி தேச துரோகிகள் என்கிறார். இந்திய நாட்டுக்கு எதிரான கொள்கைகளை அமல்படுத்துபவர்களைத்தான் நாங்கள் தேச துரோகிகள் என்கிறோம். மக்களை பிரித்து அரசியல் செய்வதை எதிர்ப்போம். மோடியின் மிரட்டலுக்கு தமிழக மக்கள் அஞ்சமாட்டார்கள். மத்தியில் பா.ஜனதா அரசை அகற்ற தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:–

சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் அவமதிப்பு செய்து பேசுபவர்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒருபோதும் ஆதரிக்காது. கருணாஸ் எம்.எல்.ஏ. பேசிய சம்பவத்துக்கு ஆதரவாக நான் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் 200 போலீசாருடன் தமிழக காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதுபோல் தமிழக அரசையும், காவல்துறையையும் விமர்சித்து பேசுபவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். தமிழக அரசு யாருக்கும் அஞ்சாமல் செயல்படுகிறது என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

ஆனால் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக காவல்துறை அதிகாரிகளையும், நீதிமன்றத்தையும் விமர்சித்தார். பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை விமர்சித்து பேசினார். இவர்கள் 2 பேரையும் இதுவரை கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள், அமைப்புகளுக்கு ஒரு சட்டமும், பா.ஜனதாவுக்கு தனி சட்டமும் இருப்பதைப்போல் உள்ளது. மத்திய, மாநில அரசுகளை விரட்ட நாம் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்