திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2018-09-23 21:45 GMT
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் நகரின் மையப்பகுதியில் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

கோவிலில் நடராஜர் சன்னதி உள்ளது. நடராஜருக்கு ஆவணி மாதம் திருமஞ்சனம், மார்கழி மாதம் திருவாதிரை, சித்திரை மாதம் திருவோணம் உள்பட ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியை முன்னிட்டு நடராஜருக்கு தேன், பால், பழம், தயிர், மஞ்சள் போன்றவை மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் நேற்று விடுமுறை நாள் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் சிலர் கிரிவலம் சென்று, கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களையும் வழிபட்டனர். 

மேலும் செய்திகள்