திருச்சி அருகே பெரியார் சிலை சேதம் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

திருச்சி அருகே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-24 23:00 GMT
திருச்சி,

திருச்சி அருகே சோமரசம்பேட்டையில் தோகைமலை மெயின் ரோட்டில் பெரியார் சிலை உள்ளது. இதனை கடந்த 1991-ம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். சிலையின் அடிப்பகுதியில் உள்ள பலகையில் தினமும் பெரியாரின் பொன்மொழிகள் வாசகமாக எழுதி வைப்பது வழக்கம். அதன்படி அந்த பகுதியை சேர்ந்த திராவிடர் கழகத்தின் ஒன்றிய செயலாளர் செபாஸ்டியன் நேற்று அதிகாலை வாசகம் எழுத வந்தார்.

அப்போது பெரியார் சிலையில் இருந்த கைத்தடி சேதப்படுத்தப்பட்டு தனியாக கீழே கிடந்தது. சிலையின் மேல் பகுதியில் இருந்த மின்விளக்குகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து திராவிடர் கழகத்தினர் சோமரசம்பேட்டையில் திரண்டனர். மேலும் பெரியார் சிலையை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

இதற்கிடையில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிலையின் அருகே பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் செபாஸ்டியன் புகார் அளித்தார். மேலும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்கிடம் திராவிடர் கழகத்தினர் புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

பெரியார் சிலையை நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் சேதப்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லாததால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலையின் அருகே போலீஸ் புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது. ஆனால் அங்கு இரவில் பணியில் இருந்த போலீசாருக்கு இது தெரியவில்லை.

பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்