கர்நாடக மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

கர்நாடக மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்தலில் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து பா.ஜனதா விலகியது.

Update: 2018-09-24 23:00 GMT
பெங்களூரு,

கர்நாடக மேல்-சபையில் உறுப்பினர்களாக இருந்த பரமேஸ்வர், ஈசுவரப்பா, சோமண்ணா ஆகியோர், கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் தங்களின் எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் மேல்-சபையில் அந்த 3 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் மேல்-சபையில் காலியாக உள்ள அந்த 3 இடங்களுக்கு வருகிற 4-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

மூன்றில் 2 இடங்கள் காங்கிரசுக்கும், ஒரு இடம் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கும் ஒதுக்கப்பட்டன. அதன்படி 2 இடங்களில் எம்.சி. வேணுகோபால், நசீர்அகமது ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அதையடுத்து நேற்று காங்கிரஸ் தலைவர்கள் புடைசூழ வேட்பாளர்கள் எம்.சி.வேணுகோபால், நசீர்அகமது ஆகிய இருவரும் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஜனதா தளம்(எஸ்) சார்பில் ரமேஷ்கவுடா மனு தாக்கல் செய்தார்.

இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். அந்த பலத்தின் அடிப்படையில் இந்த மூன்று இடங்களில் காங்கிரசுக்கு 2 இடங்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒரு இடமும் கிடைப்பது உறுதியாகும். 104 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும், பா.ஜனதாவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இருந்தாலும் வேட்பாளர்களை களம் இறக்க பா.ஜனதா திட்டமிட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பா.ஜனதா கட்சி திடீரென்று போட்டியில் இருந்து விலகியது. அக்கட்சி சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் 3 பேரும் போட்டியின்றி மேல்-சபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

மேலும் செய்திகள்