இமாசல பிரதேசத்தில் மழையில் சிக்கிய திருச்சி பள்ளி மாணவர்கள் பத்திரமாக உள்ளனர்

இமாசல பிரதேசத்தில் மழையில் சிக்கிய திருச்சி பள்ளி மாணவர்கள் பத்திரமாக உள்ளதாக “வாட்ஸ்-அப்”பில் புகைப்படம் அனுப்பி தகவல் தெரிவித்தனர்.Z

Update: 2018-09-25 23:00 GMT
திருச்சி,

இமாசல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு மழையினால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா சென்ற பயணிகள் பலர் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் திருச்சி அருகே காட்டூர் மான்போர்ட் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 31 பேர், 9 ஆசிரியர்கள் என 40 பேர் கடந்த 21-ந்தேதி இமாசல பிரதேசத்திற்கு சுற்றுலா புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் அங்கு பலத்த மழையில் சிக்கிக்கொண்டதாக நேற்று முன்தினம் இரவு தகவல் வெளியானது. இதையடுத்து சுற்றுலா சென்ற பள்ளி மாணவ-மாணவிகளிடம் அவர்களது பெற்றோரும், பள்ளி நிர்வாகத்தினரும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அதற்கு அனைவரும் பத்திரமாக இருப்பதாக தகவல் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகமும், பள்ளி நிர்வாகத்தையும், சுற்றுலா சென்றவர்களையும் தொடர்பு கொண்டு மாணவர்கள் பத்திரமாக உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தினர்.

இந்தநிலையில் மாணவ-மாணவிகள் அங்கு குலுமணாலி என்ற இடத்தில் ஒரு விடுதியில் பாதுகாப்பாக தங்கியிருப்பதாகவும், எந்தவித பாதிப்பும் இல்லை என அனைவரும் குழு புகைப்படம் எடுத்து அதனை “வாட்ஸ்-அப்” மூலம் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தினருக்கு அனுப்பி தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

அந்த புகைப்படத்தில் விடுதி முன்பு அனைவரும் உற்சாகமாக போஸ் கொடுத்தபடி உள்ளனர். மேலும் விடுதி வளாகத்தில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் விளையாடிக்கொண்டிருப்பதை போலவும், உணவு சாப்பிடுவது போலவும் புகைப்படத்தை அனுப்பினர். மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என இந்த புகைப்படம் மூலம் அறிந்த அரசு அதிகாரிகளும், பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில் இமாசல பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு சுற்றுலா செல்ல அங்கிருந்து நேற்று பஸ் மூலம் புறப்பட்டு சென்றனர். அங்கு மாணவர்களுடன் பயணத்தில் உள்ள முக்கிய ஆசிரியரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறுகையில், “நாங்கள் தங்கியிருந்த இடத்தில் எந்த ஆபத்தும் இல்லை. மழையினால் பாதிப்பும் இல்லை. டெல்லிக்கு ஆம்னி பஸ் மூலம் புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறோம். அங்கு சுற்றிப்பார்த்து விட்டு ஓரிரு நாட்களுக்கு பிறகு திருச்சி திரும்புவோம்” என்றார்.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணனிடம் மாணவர்களின் சுற்றுலா பயணம் குறித்து கேட்டபோது, “இமாசல பிரதேசம் சென்ற மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் சுற்றுலா பயணத்தை முடித்து விட்டு விரைவில் திரும்புவார்கள். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் சி.பி.எஸ்.இ. கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சுற்றுலா செல்வதற்கு முறைப்படி அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்கப் படும்” என்றார்.

மேலும் செய்திகள்