ஊழலை பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு தகுதி இல்லை பொதுக்கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு

ஊழலை பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு தகுதி இல்லை என்று தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி.கூறினார்.

Update: 2018-09-25 23:00 GMT
தஞ்சாவூர்,

ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் சிங்கள ராணுவத்துக்கு உதவி புரிந்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் பரசு ராமன், பாரதிமோகன், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர், கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் 1½ லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகள், ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்த இந்த போரின்போது இந்திய அரசு எங்களுக்கு பெரும் உதவி செய்தது என்று இந்தியா வந்த ராஜபக்சே பிரமாண வாக்குமூலம் கொடுத்துள்ளார். குற்றம் செய்தவரே இதை தெரிவித்திருக்கிறார்.

அப்போது தமிழகத்தில் தி.மு.க.வும், மத்தியில் காங்கிரசும் ஆட்சியில் இருந்தன. கருணாநிதி நினைத்திருந்தால் இந்த ஈழப்போரை தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் டி.ஆர்.பாலுவுக்கு கப்பல், தரைவழி போக்குவரத்து துறையை வாங்க முயற்சி செய்தார்களே தவிர, ஈழத்தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டவில்லை.

சிங்களர்களுக்கு என்ன உரிமை உள்ளதோ, அதே உரிமை ஈழத்தமிழர்களுக்கும் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தவர் ஜெயலலிதா. அதேபோல ஈழத்தமிழர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவளித்தவர் எம்.ஜி.ஆர். இலங்கையில் அனைத்து போராளிகளையும் ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை நடத்தியவர் எம்.ஜி.ஆர். ஆனால் அவர்களை ஒன்று சேரவிடாமல் தடுத்தவர் கருணாநிதி. அன்றைக்கு போராளிகள் ஒன்று சேர்ந்திருந்தால் இலங்கையில் ஈழம் மலர்ந்திருக்கும். ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதி, ஸ்டாலின் செய்தது என்ன? இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது இந்திய அரசு உதவி செய்தது என ராஜபக்சே கொடுத்த வாக்குமூலத்திற்கு ஸ்டாலின் பதில் அளிக்க தயாரா?. தமிழ் இனத்திற்கும், தமிழ் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்காகவும் கருணாநிதியும், ஸ்டாலினும் எதையும் கிள்ளிப்போட்டதில்லை.

தமிழகத்தில் ஊழலை பற்றி பேசுவதற்கோ, தமிழ் இனத்தை பற்றி பேசுவதற்கோ, தமிழ்நாட்டு மக்களை பற்றி பேசுவதற்கோ, திட்டங்களை பற்றி பேசுவதற்கோ தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை. தமிழகத்தில் ஊழலுக்கு வித்திட்டவர்கள் தி.மு.க.வினர்.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தியது அ.தி.மு.க. தான். ஜெயலலிதாவின் ஆத்மா, அவரின் ஆசி எங்களை வழி நடத்துகிறது. அதனால் எந்த கொம்பன் வந்தாலும், பல தினகரன்கள், பல ரஜினிகாந்துகள், பல கமல்ஹாசன்கள், ஸ்டாலின் போல 100 ஸ்டாலின்கள் வந்தாலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி ஜெயலலிதா தந்த இந்த இயக்கத்தை 100 ஆண்டுகள் ஆனாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட மாணவர் அணிச்செயலாளர் ஆர்.காந்தி, மகளிர் அணிச்செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் கோபால், பகுதி செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, சரவணன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கரந்தை பகுதி செயலாளர் அறிவுடைநம்பி வரவேற்றார். முடிவில் கீழவாசல் பகுதி செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்