நூற்பாலை ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு

அவினாசி அருகே நூற்பாலை ஊழியரின்வீட்டில் கதவின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-09-25 23:13 GMT
அனுப்பர்பாளையம்,

நூற்பாலை ஊழியரின்வீட்டில் கதவின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்ற சம்பவம்  குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ராக்கியாபாளையம் கே.ஆர்.ஜி. வீதியில் வசித்து வருபவர் அருண்குமார் (வயது 30). இவர் மங்கலம் ரோட்டில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஷோபிகா (23). இவர்களுடன் அருண் குமாரின் தாய் கமலவேணி, தங்கை சூரியலட்சுமி ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

கோவை மாவட்டம் காரமடையில் வசிக்கும் அருண்குமாரின் தாத்தாவுக்கு கடந்த 2 மாதமாக உடல் நிலை சரியில்லை. அவர்களை கவனிப்பதற்காக கமலவேணியும், சூரியலட்சுமியும் காரமடைக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவியுடன் பிச்சம்பாளையத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு அருண்குமார் சென்றார்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது படுக்கையறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன.

மேலும் அங்கிருந்த மரகட்டிலின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகள் அனைத்தும் திருட்டு போயிருந்தன. உடனே இதுபற்றி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அருண்குமார் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அருண்குமாரின் வீட்டு பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம ஆசாமிகள் பீரோவில் நகைகள் ஏதாவது இருக்கிறதா? என்று பார்த்ததும், அதில் நகை இல்லாததால், மரகட்டிலில் இருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகளை திருடிச்சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட தடயவியல் நிபுணர் குழுவினர் அருண்குமார் வீட்டில் பதிவாகி இருந்த மர்ம ஆசாமிகளின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்