குடியாத்தம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

குடியாத்தம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-26 22:50 GMT
குடியாத்தம்,

குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமத்தை சேர்ந்த தசரதன் மகன் சுகுமார் (வயது 28), ராமாலை அடுத்த காந்திகணவாய் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் யுவராஜ் (வயது 30), புவனேஸ்வரிபேட்டை முருகன்நகர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் மோகன் என்கிற காடை மோகன் (வயது 30) ஆகிய 3 பேர் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, இரவில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வந்தனர். மேலும் நகரின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மோட்டார்சைக்கிள் திருட்டிலும் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களை குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் உள்ளிட்ட போலீசார் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். தற்போது அவர்கள் வேலூர் மத்திய சிறையில் உள்ளனர்.

சுகுமார், யுவராஜ், மோகன் ஆகியோர் தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரைத்தார். அதன் பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவை மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.


மேலும் செய்திகள்