நண்பனை கொலை செய்த வழக்கு: பழ வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

நண்பனை கொலை செய்த வழக்கில் பழ வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தாராபுரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

Update: 2018-09-26 22:15 GMT
தாராபுரம்,


திருப்பூர் மாவட்டம் உடுமலை காமராஜர் நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). இவர் உடுமலை பகுதியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். அய்யப்பனும், உடுமலை யு.கே.பி. நகரைச் சேர்ந்த பழ வியாபாரி பத்மநாபன் (43) என்பவரும் பல வழக்குகளில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர்கள்.

சிறையில் இருவரும் நண்பர் ஆனார்கள். பின்னர் விடுதலையாகி வெளியில் வந்ததும், இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர். இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 18-9-2015 அன்று உடுமலை சந்தை பேட்டை பகுதியில் அய்யப்பனும், பத்மநாபனும் சந்தித்துக்கொண்டனர். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அய்யப்பனின் மனைவி மற்றும் மகள் நடத்தை குறித்து பத்மநாபன் கேவலமாக பேசியுள்ளார். அதைகேட்டு கோபமடைந்த அய்யப்பன், பத்மநாபனை சரமாரியாக அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பத்மநாபன், அய்யப்பனை கீழே தள்ளிவிட்டார்.
பின்னர் அருகில் கிடந்த கருங்கல்லை எடுத்து அய்யப்பனின் தலையில் போட்டு, கொலை செய்தார். இது குறித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மநாபனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு தாராபுரம் 3-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் அய்யப்பனை கொலை செய்த குற்றத்துக்காக பத்மநாபனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் 6 மாதம் சிறைதண்டனையும் விதித்து நீதிபதி கருணாநிதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஆனந்தன் ஆஜரானார். 

மேலும் செய்திகள்