கும்பகோணம் கோர்ட்டில் பிரபல தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி ஆஜர் கொலை வழக்கில் தேடப்பட்டவர்

கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிரபல தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2018-09-27 23:00 GMT
கும்பகோணம்,

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜா என்கிற காத்தவராயன்(வயது 54). இவர் தனது மனைவியின் சகோதரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து அந்த பெண் தனது கணவர் மயிலாடுதுறையை சேர்ந்த வேலாயுதத்திடம் கூறினார். இதனால் வேலாயுதத்துக்கும், ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, வேலாயுதத்தை கும்பகோணம் பகுதிக்கு கடத்தி வந்து தலையை துண்டித்துக்கொலை செய்தார். இந்த சம்பவம் கடந்த 1999-ம் ஆண்டு நடந்தது. இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா உள்பட 6 பேரை கைது செய்தனர்.

பின்னர் 6 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். அதன் பிறகு ராஜா தலைமறைவாகி விட்டார். இந்த வழக்கில் ராஜாவை தவிர மற்ற 5 பேரையும் கும்பகோணம் கோர்ட்டு கடந்த 2010-ம் ஆண்டு விடுதலை செய்தது. தலைமறைவாக இருந்த ராஜாவை கடந்த 20 ஆண்டுகளாக கும்பகோணம் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராஜா, மும்பையை சேர்ந்த பிரபல தாதா சோட்டா ராஜன் என்பவருக்கு கூட்டாளியாக இருந்து வந்தது தெரிய வந்தது. மேலும் சோட்டா ராஜனுடன் சேர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் எட்டவா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கோர்ட்டின் முன்பு ஒருவரை கொலை செய்த வழக்கில் ராஜாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதும், அவர் பாருகாபாத் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் கும்பகோணம் போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து ராஜாவை, திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் உத்தரப்பிரதேசத்தில் இருந்து கும்பகோணத்துக்கு அழைத்து வந்தனர்.

அவர் ஆயுள் தண்டனை கைதி என்பதால் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் அவருடன் பாதுகாப்புக்காக வந்திருந்தனர். நேற்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ராஜா, கும்பகோணம் முதலாம் எண் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்று(வெள்ளிக்கிழமை) ஒத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் ராஜாவை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இன்று ராஜாவை போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்த உள்ளனர்.

மேலும் செய்திகள்