ராமநாதபுரம், மணல் கொள்ளையருடன் பேரம் பேசிய இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்

மணல் கொள்ளையருடன் பேரம் பேசியதாக குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் டி.ஐ.ஜி. உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2018-09-27 23:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது நசீர். இவர் மணல் கொள்ளையருடன் பேரம் பேசியது தொடர்பான ஆடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘வாட்ஸ்-அப்‘ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரித்து உடனடியாக அறிக்கை அளிக்க ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜனுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ள குரலானது சிக்கல் இன்ஸ்பெக்டர் முகமது நசீரின் குரல்தானா? என்பதை பரிசோதிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த குறித்த விசாரணையின் முடிவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் நேற்று தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது நசீரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி உத்தரவிட்டார்.

மணல் கொள்ளையருடன் நடந்த பேரம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்