கடலாடி தாலுகாவில் மணல் எடுக்க அனுமதிக்கும் நில உரிமையாளர் மீதும் நடவடிக்கை தாசில்தார் எச்சரிக்கை

கடலாடி தாலுகாவில் அரசு அனுமதியின்றி மணல் எடுக்க நிலம் வழங்கும் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-09-28 22:15 GMT

சாயல்குடி,

கடலாடி தாலுகாவில் அ.உசிலங்குளம், எம்.கரிசல்குளம், நரிப்பையூர், கன்னிராஜபுரம், மூக்கையூர், பி.கீரந்தை, தனிச்சியம், ஓரிவயல், கீழச்செல்வனு£ர், கடுகுசந்தை, பெரியகுளம், ஆப்பனு£ர், கே.வேப்பங்குளம் உள்ளிட்ட பல்வேறு வருவாய் கிராமங்களில் உள்ள ஒரு சில பட்டா நிலங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருவதாக வரபெற்ற புகார்களின் அடிப்படையில் கடலாடி தாசில்தார் முத்துலட்சுமி தலைமையில், மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கூட்டாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வின் போது முதற்கட்டமாக அ.உசிலங்குளம் மற்றும் எம்.கரிசல்குளம் ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள குறிப்பிட்ட சில பட்டா நிலங்களில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களின் மீது கனிமம் மற்றும் சுரங்கம், சிறு கனிம விதிகளின்படி நடவடிக்கை எடுக்க பரமக்குடி சப்–கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாசில்தார் முத்துலட்சுமி கூறியிருப்பதாவது:–

கிராமங்களில் தொடர்சசியாக ஆய்வு மேற்கொள்ளபட்டு பட்டா நிலங்களில் திருட்டுத் தனமாக மணல் அள்ளப்படுவது கண்டறியப்படும் நிலங்களில் நிலஉரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க பரமக்குடி சப்–கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும். பல்வேறு பட்டா நிலங்கலில் பட்டாதாரர்கள் அனுமதியின்றி மணல் திருடர்களால் திருட்டுத் தனமாக மணல் அள்ளி கடத்தப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோன்ற நேர்வுகளில் சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களே பொறுப்பாக நேரிடும் என்பதால் கடலாடி தாலுகாவில் பட்டா நிலங்களில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவது கண்டறியப்பட்டால் அதற்கு துணை போகும் சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களுக்கு அபராதம் விதிக்கபடுவதுடன் குற்றவியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடும். மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டால் ஐகோர்ட்டு உத்தரவின்படி அரசு வழங்கியுள்ள அறிவுரைகளின்படி கைப்பற்றப்படும் வாகனங்கள் வாகன உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட மாட்டாது. இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்