எச்.ராஜாவிடம் விளக்கம் கேட்க அவசியம் இல்லை ஐகோர்ட்டு கருத்து

கோர்ட்டு அவமதிப்பு வழக்குப்பதிவு செய்வது குறித்து எச்.ராஜாவிடம் விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-28 22:45 GMT
சென்னை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்ட பா.ஜனதா தேசிய தலைவர் எச்.ராஜா, ஐகோர்ட்டு குறித்து கடுமையான வார்த்தையில் விமர்சனம் செய்தார். இதையடுத்து அவர் மீது சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன், எச்.ராஜா மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய அனுமதிக்கேட்டு அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணிடம் மனு கொடுத்தார்.

அந்த மனுவுக்கு, அக்டோபர் 3-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி எச்.ராஜாவுக்கு அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவசியம் இல்லை

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கண்ணதாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘எச்.ராஜாவுக்கு எதிராக வலுவான ஆதாரம் உள்ளதால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய அவரின் கருத்தை கேட்க தேவையில்லை என்று உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், மனுவுக்கு பதிலளிக்க அட்வகேட் ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும், ‘கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய அனுமதி வழங்குவது குறித்து அட்வகேட் ஜெனரல் முடிவு செய்ய வேண்டுமே தவிர, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை’ என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்