ரெட்டியார்பாளையத்தில் மினி லாரி டிரைவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை

புதுவை ரெட்டியார்பாளையத்தில் மினி லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2018-10-01 05:15 IST

புதுச்சேரி,

புதுவை ரெட்டியார்பாளையம் லாம்பர்ட் சரவணன் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் சதீஷ்குமார். டிரைவர். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு மூன்று மகன்கள். 2–வது மகன் உதயசங்கர் (வயது 25). மினிலாரி டிரைவர்.

இவர் நேற்று இரவு 7 மணியளவில் தனது வீட்டில் இருந்து ரெட்டியார்பாளையம் சாலையில் உள்ள மருந்துக்கடையில் மாத்திரை வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே உதயசங்கர் வந்தபோது அவருடைய மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்தனர். அப்போது அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பிகள், கத்தி போன்ற ஆயுதங்களால் திடீரென தாக்கினார்கள். உடனே உதயசங்கர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தார்.

ஆனால் அந்த மர்ம கும்பல் உதயசங்கரை துரத்தி சென்று ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே உதயசங்கர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் புதுச்சேரி சட்டம்–ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் சூப்பிரண்டுகள் ரச்சனா சிங், ரங்கநாதன், இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, நாகராஜ், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் உதயசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயசங்கரை கொலை செய்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் ரெட்டியார்பாளையம் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் செய்திகள்