இரும்பாலை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
இரும்பாலை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சூரமங்கலம்,
சேலம் இரும்பாலை அருகே தளவாய்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி ஆகிய இடங்களில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக இரும்பாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் தலைமையில் போலீசார் தளவாய்பட்டி பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் பாலுசாமி (வயது 54) என்பவர் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு 11 மூட்டைகளில் இருந்த நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து பாலுசாமியை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து போலீசார் மஜ்ரா கொல்லப்பட்டி பகுதிக்கு சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன்(28) என்பவர் தனது வீடு அருகே குடிசை அமைத்து அங்கு அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 2 மூட்டைகளில் இருந்த நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இரும்பாலை பகுதியில் வேறு யாராவது அனுமதியின்றி பட்டாசு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.