திருச்சி அருங்காட்சியக பழமையான ஆவணங்கள் ரூ.2½ கோடியில் டிஜிட்டல் மயம்

திருச்சி அருங்காட்சியகத்தில் உள்ள பழமையான ஆவணங்கள் ரூ.2½ கோடியில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஷ்தா தெரிவித்தார்.

Update: 2018-10-03 23:00 GMT
திருச்சி,

தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஷ்தா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி வந்தார். அப்போது திருச்சி ரெயில்வே அருங்காட்சியகத்தில் பழமையான ஊட்டி மலை ரெயில் என்ஜின் உள்பட அங்குள்ள அரிய பொருட்களை அவர் பார்வையிட்டார்.

அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

திருச்சி ரெயில்வே அருங்காட்சியகத்தை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு பழமையான டீசல் என்ஜின், செயற்கை நீருற்று உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது. மேலும் அருங்காட்சியகத்தை பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட பேக்கேஜ் திட்டம் உள்ளது. ரெயில்வே அருங்காட்சியகத்தில் உள்ள பழமையான ஆவணங்களில் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இதனை டிஜிட்டல் மயமாக்க ரூ.2½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்கு ரெயில்வேயில் ரெயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டு விட்டது. ஊட்டி மலை ரெயில் பாதை உள்ளிட்ட சிறு இடங்களில் மட்டும் மின்மயமாக்கும் பணி நடைபெறவில்லை.

சேலம்-விருத்தாசலம் இடையே ரெயில் பாதை மின்மயமாக்கும் பணி இந்த நிதி ஆண்டுக்குள் முடிவடையும். ரெயில்வே நிலங்களை தனியாருக்கு ஒப்பந்தம் விடப்படுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் செலவினங்களை சரிகட்ட முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து திருச்சி ரெயில்வே அருங்காட்சியக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பழமையான தீயணைப்பு வாகனத்தை சுற்றி கண்ணாடி கூண்டுகள் அமைத்து பாதுகாப்பாக வைக்க அவர் உத்தரவிட்டார்.சிறுவர் ரெயிலில் ஏறி அருங்காட்சியக வளாகத்தை சுற்றி வந்தார். காந்தியடிகள் குறித்த தபால் தலை கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.

அதன்பின் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவில்லா டிக்கெட் மைய வளாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் எந்திரத்தை, தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தொடங்கி வைத்தார். மேலும் திருச்சி பொன்மலை ரெயில்வே மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சைக்கான எக்ஸ்-ரே கருவி மற்றும் அறை, நோயாளிகளுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய அறை உள்ளிட்டவற்றையும் அவர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதய்குமார் ரெட்டி உள்பட ரெயில்வே அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்