ஜனதாதளம்(எஸ்)கட்சி நிர்வாகிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை

ராமநகர் தொகுதி வேட்பாளர் குறித்து ஜனதா தளம்(எஸ்)கட்சி நிர்வாகிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் பண்ணை வீட்டில் ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-10-04 00:06 GMT
பெங்களூரு,

ராமநகர் தொகுதி தேர்தலில் மனைவி அனிதா குமாரசாமியை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் ராமநகர் மற்றும் சென்னபட்டணா ஆகிய 2 தொகுதியில் குமாரசாமி போட்டியிட்டார்.

இதில் 2 தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்துநியாமகவுடா எம்.எல்.ஏ. விபத்தில் மரணம் அடைந்ததால், சட்டசபையில் ஜமகண்டி தொகுதி காலியாக உள்ளது. ஆகமொத்தம் கர்நாடக சட்டசபையில் ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. அந்த 2 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ராமநகர் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து ஜனதா தளம்(எஸ்) கட்சி நிர்வாகிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் தாலுகாவில் கேதநாயக்கனஹள்ளியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தீவிர ஆலோசனை நடத்தினார்.

ராமநகர் தொகுதியில் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியை நிறுத்த வேண்டும் என்று கட்சியினர் சிலர் வலியுறுத்தினர். அந்த தொகுதியில் தனது மகனான நடிகர் நிகில்கவுடாவை நிறுத்துவது குறித்து குமாரசாமி ஆலோசித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அரசியல் பிரவேசத்தை சிறிது காலத்திற்கு தள்ளிவைக்க நிகில்கவுடா விரும்புவதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த கூட்டத்தில் ராமநகர் தொகுதி இடைத்தேர்தலில் அனிதா குமாரசாமியை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற தோ்தலில் ஹாசன் தொகுதியில் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்தும் அதில் ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த கூட்டம் நடைபெற்ற பண்ணை வீட்டுக்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். கூட்டம் நடைபெற்ற பண்ணை வீட்டின் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ராமநகர் தொகுதியில் நடைபெற உள்ள தேர்தல் குறித்து ஆலோசிக்க இந்த கூட்டத்தை கூட்டவில்லை. ராமநகர் மற்றும் சென்னபட்டணா ஆகிய 2 தொகுதிகளின் கட்சி நிர்வாகிகளுடன் திறந்த மனதுடன் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறேன். கடும் வேலைப்பளுவுக்கு மத்தியிலும், கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாட இங்கே வந்துள்ளேன்” என்றார்.

மேலும் செய்திகள்