சனவெளி கோட்டைக்கரை ஆற்றில் மணல் கொள்ளை

சனவெளி கோட்டைக்கரை ஆற்றில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-10-04 21:45 GMT
ஆர்.எஸ்.மங்கலம்,


ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டுஉள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சனவெளி கோட்டைக்கரை ஆற்றுப்படுகையில் மாட்டு வண்டி மூலம் மணல் எடுத்து விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி மணல் எடுக்க மாட்டு வண்டிக்கு ரூ.64 வீதம் கனிம வளத்துறை சார்பில் வசூலிக்கப்பட்டது. ஆனால் இவ்வாறு மணல் அள்ளும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் சிலர் அதனை ரூ.1200-க்கு விற்பனை செய்து வருவதாகவும், மேலும் சிலர் வேறு இடத்தில் சேமித்து வைத்து லாரிகளில் ஏற்றி அதிக விலைக்கு விற்று வருவதாகவும் தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார்கள் வருகின்றன.

இந்த நிலையில் கனிம வளத்துறையினர் அனுமதித்துள்ள இடத்தில் மணல் எடுக்காமல் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அதிகமான மணல் கிடைக்கும் இடத்தில் மணல் கொள்ளை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதுதவிர 10 அடி ஆழத்துக்கும் அதிகமாக தோண்டி ஆற்றில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் உப்பு நீராக மாறிஉள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாட்டு வண்டிக்காரர்கள் சங்கம் அமைத்து புதிதாக மணல் அள்ள வருபவர்கள் சங்கத்திற்கு ரூ.12,000 செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே லாப நோக்கத்துடன் நடைபெறும் இதுபோன்ற மணல் கொள்ளையை மாவட்ட கலெக்டர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்