வேளாண் விளை பொருட்களை அரசே கொள்முதல் செய்யும் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுவை மாநிலத்தில் வேளாண் விளை பொருட்களை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

Update: 2018-10-04 23:35 GMT
புதுச்சேரி,

மத்திய அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் சார்பில் 2015-16 விவசாய ஆண்டினை அடிப்படையாக கொண்டு 10-வது விவசாய கணக்கெடுப்பு பணி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை மாநில அரசுகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக மத்திய அரசு 100 சதவீத நிதி உதவி அளிக்கிறது. அதன்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் பொருளாதாரம் மற்றும் புள்ளி விவரத்துறை சார்பில் விவசாய கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. புதுவை அண்ணாமலை ஓட்டலில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

இதில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:- விவசாயத்தை லாபகரமான தொழிலாக கருத முடியாது. இதில் லாபமும் ஈட்ட முடியாது. விவசாய நிலங்கள் குறைந்து வருகின்றன. விவசாயிகள் பல சவால்களையும், இடர்பாடுகளையும் கடந்து விளை பொருட்களை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

விவசாயிகளால் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை. அதற்குரிய விலையை வியாபாரிகள் தான் நிர்ணயம் செய்கின்றனர். புதுவை மாநிலத்தில் வேளாண் விளை பொருட்களை அரசே கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முகாமில் திரட்டப்படும் தகவல்கள் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் முதன்மை ஆலோசகர் சுதா பி ராவ், கூடுதல் இயக்குனர் வித்யாதர், இந்திய விவசாய கணக்கெடுப்பு இயக்குனர் ராதா அஷ்ரித், புதுவை பொருளாதாரம் மற்றும் புள்ளி விவரத்துறை செயலாளர் பத்மா ஜெய்ஸ்வால், இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி வகுப்பில் புதுவை மட்டுமின்றி தமிழ்நாடு, டெல்லி, பீகார், ஜம்மு காஷ்மீர், கோவா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மேற்குவங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புள்ளி விவரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி வகுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை புள்ளி விவரத்துறை இணை இயக்குனர் சுந்தரமூர்த்தி, துணை இயக்குனர் பார்த்தசாரதி, புள்ளிவிவர அதிகாரி பக்கிரிசாமி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்