கால்வாயை உயர்த்தி கட்டியதால் தெருவில் மழைநீர் தேக்கம் தண்ணீரில் நின்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் கால்வாயை உயர்த்தி கட்டியதால் மழைநீர் செல்ல வழியில்லாமல் தெருவில் தேங்கி நின்றது. இதை கண்டித்து தேங்கிய தண்ணீரில் நின்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-05 22:00 GMT
பூந்தமல்லி,

அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கொளுத்துவான்சேரி, பிள்ளையார் கோவில் தெருவில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.60 லட்சத்தில் கடந்த ஆண்டு சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.

இந்த கால்வாய் உயர்த்தி அமைக்கப்பட்டு உள்ளதால் அந்த தெருவில் உள்ள பாலாஜி நகர் 1 முதல் 3 தெருக்களில் இருந்து மழைநீர் வெளியேற வழியில்லை. அந்த தெருக்களில் வாகனங்கள் செல்லவும் தடையாக உள்ளது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் பலத்த மழையால் பாலாஜி நகர் 1 முதல் 3 தெருக்களிலும் மழைநீர் செல்ல வழியில்லாமல் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பாலாஜி நகரில் இதுவரை மழைநீர் தேங்கி நின்றதே இல்லை. கடந்த ஆண்டு மழைநீர் கால்வாய் அமைத்தனர். அப்போதே கால்வாயை முறையாக அமைக்கவில்லை. மழைநீர் செல்ல வழியில்லாததால் தெருவில் தண்ணீர் தேங்கும் என்றோம். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. 2 நாட்கள் பெய்த மழைக்கே தெருவில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. மழைநீரில் கழிவுநீரும் கலந்து இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. கால்வாயை உயரமாக கட்டி உள்ளதால் வாகனங்கள் செல்லவும் தடையாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து அய்யப்பன்தாங்கல் ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அதிகாரிகளையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இதையடுத்து தெருவின் குறுக்கே உயர்த்தி கட்டப்பட்டு உள்ள கால்வாயை உடைத்து விட்டு அந்த பகுதியில் மட்டும் சற்று தாழ்வாக மாற்றி அமைப்பதாக கூறிய அதிகாரிகள், தற்காலிகமாக கால்வாயின் ஒரு பகுதியை உடைத்து தெருவில் தேங்கி உள்ள மழைநீர் வெளியேற வழி செய்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்