மாவட்டம் முழுவதும் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக 91 இடங்கள் தேர்வு - கலெக்டர் தகவல்

மாவட்டம் முழுவதும் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக 91 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-05 23:30 GMT
வேலூர்,

தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் 91 இடங்கள் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்பேரில் வேலூர் மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் இடங்களை கண்டறிந்து அங்கு மழைநீர் தேங்காமல் இருக்கவும், அந்தப்பகுதி மக்களை தங்க வைப்பதற்கான முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மழை நேரத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக வேலூர் நகரில் உள்ள பெரிய கால்வாயான நிக்கல்சன் கால்வாய் தூர்வாரும் பணி நேற்று நடந்தது. கன்சால் பேட்டை, பழைய பைபாஸ் ரோடு பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணியை கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் 91 இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் சம்பத் நகர், திடீர் நகர், இந்திரா நகர், கன்சால்பேட்டை ஆகிய 4 இடங்கள் மழை பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த 4 பகுதிகளிலும் மழை பாதிப்பு ஏற்பட்டால் அங்குள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 4 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கண்டறியப்பட்டுள்ள 91 இடங்களில் 61 இடங்கள் 5 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கும் பகுதியாகவும், 30 இடங்கள் 3 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கும் பகுதியாகவும் கருதப்படுகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) வானிலை ஆய்வு மையத்தால் ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட 91 இடங்களிலும் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பஞ்சாயத்துகள் சார்பிலும் மாவட்டம் முழுவதும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. மழை பாதிப்புகளை கண்காணிக்க 259 அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 639 பேர் கொண்ட முதல்நிலை பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 62 பேர் பெண்கள்.

வேலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் மேகராஜ், மாநகராட்சி கமிஷனர் விஜயகுமார், உதவி கமிஷனர்கள் மதிவாணன், மணிவண்ணன், சுகாதார அலுவலர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்