21 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் வேப்பூர் தீயணைப்பு நிலையம்

வேப்பூரில் தீயணைப்பு நிலையம் 21 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-10-06 22:30 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வேப்பூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மகளிர் கலைக்கல்லூரி, பத்திர பதிவு அலுவலகம், அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, புறக்காவல் நிலையம், அரசு மாணவர்கள் விடுதிகள், வேப்பூர் வட்டார தொடக்கக்கல்வி அலுவலகம், ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் அரசுப் பள்ளிகள் உள்ளன.

மேலும் இங்கு தீயணைப்பு நிலையம் கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 21 ஆண்டுகளாக தொடர்ந்து சேவை செய்து வருகிறது. இந்த அலுவலகத்தில் 17 பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போது வேப்பூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இங்கு தீயணைப்பு வீரர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. தீயணைப்பு கருவிகளை பாதுகாப்பாக வைப்பதற்கும், பதிவேடுகள் பாதுகாப்பாக வைப்பதற்கும் இடமில்லை. தீயணைப்பு வீரர்கள் பயிற்சிகள் கூட செய்ய முடியவில்லை. மேலும் பஸ் நிலையம் அருகில் உள்ளதால் தீயணைப்பு வாகனத்தை உடனடியாக இயக்க முடியவில்லை. அவசர அழைப்பிற்கு உடனே செல்ல முடியாத சூழ்நிலையே உள்ளது. 4 பேர் மட்டுமே தங்கக்கூடிய கட்டிடத்தில் 17 தீயணைப்பு வீரர்கள் தங்கி சிரமமான நிலையில் வேலை பார்த்து வருகின்றனர்.

மேலும் வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக, வேப்பூர் குன்னம் செல்லும் மெயின் ரோட்டில் அம்மா பூங்கா எதிரில் கடந்த 2012-ம் ஆண்டு சுமார் 49 ஏக்கர் இடத்தை வாங்கி அரசு ஒதுக்கீடு செய்தது. ஆனால் இன்னும் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. பலமுறை நினைவூட்டல் கடிதம் வாயிலாக தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் புதிதாக தீயணைப்பு நிலைய அலுவலக கட்டிடம் அமைத்து கொடுக்கப்பட்டால் ஆழ் குழாய் அமைத்து அதிலிருந்து உடனடியாக தண்ணீரை பிடித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முடியும்.

பெரிய தொட்டி அமைத்து அதில் நீர் நிரப்பியும் எடுத்து செல்லலாம். எனவே வேப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்