வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

தந்திராயன்குப்பம் கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-06 23:15 GMT
வானூர்,

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் போலீஸ் சரகம் தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ஒரு கும்பல் அடிக்கடி பணம் பறித்துச் செல்வதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு புகார் வந் தது. அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் தலைமையில் போலீசார் தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று மாலையிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் அங்கு சுற்றி வந்ததை பார்த்து போலீசார் கண்காணித்தனர்.

சிறிது நேரத்தில் அந்த 2 வாலிபர்களும் கடற்கரைக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அதனை கவனித்த போலீசார் விரைந்து சென்று அந்த 2 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் சின்ன முதலியார்சாவடியைச் சேர்ந்த ஏழுமலை (வயது 25), சிலம்பரசன் (27) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த 2 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்