தோகாவில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 1½ கிலோ தங்கம் சிக்கியது

தோகாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1½ கிலோ தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-10-07 22:45 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தோகாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஹைதர் ரூஸ் (வயது 30) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் அவரது சூட்கேசில் இடுப்பு வலிக்காக கட்டும் ரப்பர் பெல்ட் ஒன்று இருந்தது. சந்தேகத்தின் பேரில் அதை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் 3 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.45 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் எடைகொண்ட தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஹைதர் ரூசை கைது செய்தனர்.

மேலும் அவர் யாருக்காக அந்த தங்க கட்டிகளை தோகாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்?. சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்