வனஉயிரின வார விழா: ஊட்டியில் புகைப்பட கண்காட்சி

வனஉயிரின வார விழாவையொட்டி ஊட்டியில் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.

Update: 2018-10-08 22:15 GMT

ஊட்டி,

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2–ந் தேதி முதல் 8–ந் தேதி வரை வனஉயிரின வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட வனத்துறை மற்றும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி சார்பில் வனஉயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த புகைப்பட கண்காட்சி ஊட்டி அரசு கலைக்கல்லூரி அரங்கில் நேற்று தொடங்கியது.

இந்த கண்காட்சியை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் உலகநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எபனேசர், வனவிலங்கு உயிரியல் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். புகைப்பட கண்காட்சி நாளை(புதன்கிழமை) வரை நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புகைப்படங்களை காணலாம். இதனை தனியார், அரசு பள்ளி மாணவ– மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடலாம்.

கண்காட்சியில் பிளாஸ்டிக் பொருட்களால் வனவிலங்குகளுக்கு தீங்கு ஏற்படுவது, அழிந்து வரும் வனவிலங்குகளை பாதுகாப்பது ஆகியவற்றை விளக்கும் வகையில் புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன. பூச்சிகள், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், வன அமைப்புகள், மனித–வனவிலங்கு மோதல்கள் குறித்த புகைப்படங்கள் தத்ரூபமாக காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் பட்டாம்பூச்சி, தவளை, பாம்பு வகைகள், நீலகிரி சிரிக்கும் பறவை, நீலகிரி சிட்டு, நீலகிரி புறா, நீலகிரி வரையாடு, கழுகு, காட்டுயானை, புலி, கரடி, சிறுத்தைப்புலி போன்றவற்றின் புகைப்படங்களை கல்லூரி மாணவ–மாணவிகள் பார்வையிட்டனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவ–மாணவிகள் கூறும்போது, வனஉயிரின வார விழாவை முன்னிட்டு ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் முதல் முறையாக வனஉயிரினங்கள் மற்றும் சுற்றுச்சுழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி புகைப்பட கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ள புகைப்படங்களை பார்வையிட்டு, அழிந்து வரும் வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்து தெரிந்து கொண்டோம். மேலும் இளங்கலை மற்றும் முதுமலை மாணவர்களுக்கு கண்காட்சி பயன் உள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் ஆய்வுகளை மேற்கொண்டு கட்டுரைகளை சமர்ப்பிக்க முடியும் என்றனர்.

மேலும் செய்திகள்