பாபநாசம் அருகே, டாஸ்மாக் கடையில் ரூ.4¼ லட்சம் மதுபாட்டில்களை திருடிய 3 பேர் கைது

பாபநாசம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ.4¼ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிய 3 பேரை வாகன சோதனையின் போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Update: 2018-10-08 21:30 GMT
பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா இடையிருப்பில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சம்பவத்தன்று இரவு பூட்டை உடைத்து ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 100 மதிப்புள்ள மதுபாட்டில்களை சிலர் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் குருமூர்த்தி பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்றவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை திருக்கருகாவூர் வெட்டாறு பாலம் அருகில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், அன்பழகன், ஏட்டு சம்பத்குமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் வந்த 5 பேர், போலீசாரை பார்த்ததும் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர். இதை பார்த்த போலீசார் அவர்களை விரட்டி சென்று 3 பேரை மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சை பொட்டுவாச்சாவடி வடக்கு தெருவை சேர்ந்த மெல்வின் சகாயராஜ் (வயது37), ஒரத்தநாடு தாலுகா அக்கரை வட்டம் தோப்பு தெருவை சேர்ந்த சின்னராஜ் (29), தஞ்சை விளார் ரோடு அன்பு நகர் முதல் தெருவை சேர்ந்த வீரசெல்வம்(37) என்பதும், இவர்கள் 3 பேர் தான் இடையிருப்பு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும், தப்பிஓடிய கும்பகோணத்தை சேர்ந்த குருமூர்த்தி, தஞ்சையை சேர்ந்த புட்டு அறிவு ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்