விருத்தாசலம் அருகே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

விருத்தாசலம் அருகே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-08 23:14 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ளது செம்பளாக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்திற்கு செல்ல உளுந்தூர்பேட்டை சாலையில் இருந்து ரெயில்வே பாதையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

மழைபெய்யும் காலங்களில் அந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியிருக்கும். இதன்காரணமாக அப்பகுதி மக்கள் சுரங்கப்பாதையின் வழியாக சென்று வரமுடியாமல் கடும் அவதியடைந்து வந்தனர். சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க பொதுமக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் விருத்தாசலம் பகுதியில் கடந்த நில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் செம்பளாக்குறிச்சி கிராம மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரமுடியாமல் சிரமமடைந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அப்பகுதி மக்கள் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் செம்பளாக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். தொடர்ந்து அவர்கள் சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்காத பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த ரெயில்வே மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் சர்வீஸ் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பின்னர் இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்று பொது மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்