கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-10-09 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைச்செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரவி கோரிக்கைகள் குறித்து விளக்கினார். முன்னாள் மண்டல தலைவர் மணிவேலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் பேசினார்கள். இதில், கிராமப்புற கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். தர ஊதியம் ரூ. 7 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக பெறுவதற்கான அரசாணை 102-ல் திருத்தம் செய்ய வேண்டும். 2016 ஜனவரி 1-ந் தேதி முதல் எம்.பில்., மற்றும் பி.எச்டி., முடித்தவர்களுக்கு யு.ஜி.சி. நெறி முறைகள் 2018-ல், அனுமதிக்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

தர ஊதியம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் வழங்கியதில் உள்ள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 2015-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முழுத்தகுதிச் சான்று, பணி வரன்முறை ஆணை மற்றும் தகுதி காண்பவரும் முடித்தமைக்கான ஆணை வழங்க வேண்டும். கல்லூரி பேராசிரியர்கள் பணி மேம்பாடுகால முறைப்படி வழங்க வேண்டும். உறுப்புக்கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி அரசாணை வெளியிட வேண்டும். அரசுக் கல்லூரிகளின் பாதுகாப்புக்கென அறிவிக்கப்பட்ட சுற்றுச்சுவர் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டு ஆணை வழங்க வேண்டும்.கழக பொறுப்பாளர்கள் மீது விசாரணையின்றி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்