கிராம நிர்வாக அலுவலர்களின் ஒப்புதல் பெறாமல் பட்டா வழங்க கூடாது - குறைதீர்வு கூட்டத்தில் கோட்டாட்சியரிடம் வலியுறுத்தல்

ஆரணி கோட்ட அளவில் நடந்த கிராம நிர்வாக அலுவலர் குறைதீர்வு நாள் கூட்டத்தில், தங்கள் ஒப்புதலுடனேயே பட்டா வழங்க வேண்டும் என கோட்டாட்சியரிடம் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.

Update: 2018-10-09 23:00 GMT
ஆரணி,

ஆரணி வருவாய் கோட்டத்தில் உள்ள ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய வட்டங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறைதீர்வுநாள் கூட்டம் ஆரணி வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சங்க மாவட்ட பொருளாளர் எம்.செந்தில்நாதன், மாவட்ட அமைப்பு செயலாளர் கே.வெங்கட்ராமன், மாவட்ட இணை செயலாளர் எஸ்.ஜெயச்சந்திரன், ஆரணி கோட்ட செயலாளர் எஸ்.வெங்கடேஷ், ஆரணி வட்டத் தலைவர்கள் ஆர்.கோபால், பி.மகாலிங்கம், எ.மணி ஆகியோர் முன்னிலையில் வருவாய் கோட்ட அளவில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு கோட்டாட்சியர் உமாமகேஸ்வரியிடம் வழங்கப்பட்டது.

அந்த மனுவில் கிராமநிர்வாக அலுவலர்கள் கூறியிருப்பதாவது:-

“ஆரணி கோட்ட அளவில் கிராம நிர்வாக அலுவலர்கள் முதுநிலை பட்டியல் வழங்கிட வேண்டும், ஆரணி வட்டத்தில் கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 8 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிப்பதற்கான கோப்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து அரசுக்கு அனுப்பப்பட்டு நீண்டகாலமாக நிலுவையிலுள்ளது. இதன் மீது தனி கவனம் செலுத்திட வேண்டும். ஆரணி வட்டத்தில் 10 வருவாய் கிராமங்களில் கிராம உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. நிலவரி வசூல் காலம் தொடங்கும் முன்னரே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வரும் அம்மா திட்டமானது பல சுற்றுக்கள் நடந்து முடிந்த நிலையிலும் இதுவரை செலவினத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. அரசிடம் பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக் கொள்வது, உட்பிரிவு பட்டா மாறுதலில் கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரை இல்லாமல் பட்டா வழங்கப்படுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க வருவாய் நிலையாணைகளின்படி கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரை பெற்று பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முடிவில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சங்கர் நன்றிகூறினார்.

மேலும் செய்திகள்