மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக திரைப்பட இயக்குனரிடம் ரூ.50 லட்சம் மோசடி; உரக்கடைக்காரர் கைது

திரைப்பட இயக்குனரின் மகளுக்கு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி கொடுப்பதாக ரூ.50 லட்சம் மோசடி செய்த உரக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-10-10 13:30 GMT

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே செட்டிக்குளத்தை சேர்ந்தவர் வினோபா (வயது 48). இவர், தனக்கு தெரிந்த ஒருவரின் மகளுக்கு திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். ‘சீட்’ வாங்கி கொடுக்க உப்புவேலூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர் (50) என்பவரை தொடர்பு கொண்டார். அவரும் ‘சீட்’ வாங்கிக்கொடுப்பதாக உறுதியளித்தார். இதற்கு அதிக பணம் செலவாகும் என்று அவர் கூறியிருக்கிறார்.

இதையடுத்து வினோபா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.50 லட்சத்தை பன்னீரிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர், மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுக்காமல் காலதாமதம் செய்தார். இதையடுத்து தான் கொடுத்த ரூ.50 லட்சத்தை திருப்பி தருமாறு வினோபா கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுத்ததுடன், வினோபாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கிளியனூர் போலீஸ் நிலையத்தில் வினோபா புகார் செய்தார். அதில், சென்னையை சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் ராஜ்கபூரின் மகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கி கொடுப்பதாக ரூ.50 லட்சத்தை பன்னீர் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீரை கைது செய்தனர். அவர் புதுவை ஜிப்மர் முன்னாள் ஊழியர் என்பதும், தற்போது உப்புவேலூர் கிராமத்தில் உரக்கடை நடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்