மல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி தீவிரம் நவீன எந்திரம் மூலம் நடக்கிறது

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை நவீன எந்திரம் மூலம் ஆழப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2018-10-10 22:45 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ளது மல்லிப்பட்டினம். இங்கு உள்ள மீன்பிடி துறைமுகம் பல ஆண்டுகளாக மோதுமான இடவசதி இன்றி செயல்பட்டு வந்தது.

இந்த மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்து, நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் ரூ.66 கோடி மதிப்பீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. இதில் பழைய மீன்பிடி துறைமுகத்தில் இருந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும் படகு இறங்கு தளம், மீனவர்கள் வலைகளை காய வைக்கும் இடம், ஓய்வறை ஆகியவையும் கட்டப்பட்டு வருகிறது. துறைமுகத்தை சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்த நிலையில் படகுகளை நிறுத்தி வைக்கும் கடல் பகுதியில் மண் மேடுகள் இருந்தன. தூர்ந்து போய் ஆழம் குறைவாக இருந்த அப்பகுதியை படகுகள் நிறுத்த வசதியாக ஆழப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் விசைப்படகுகளை நிறுத்தி வைக்க ஏதுவாக, மல்லிப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, கடலில் இருந்த மணலை குழாய் மூலம் உறிஞ்சி ஆழப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடலில் இருந்து உறிஞ்சப்படும் மணல் கரையோரம் கொட்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் காரணமாக மல்லிப்பட்டினம் கடற்கரை பகுதியில் மலைபோல மணல் குவிந்து கிடக்கிறது. துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணிகளுக்கு மீனவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்