சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே: காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் - சீராக குடிநீர் வழங்க கோரிக்கை

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சீராக குடிநீர் வழங்க கோரி நடைபெற்றது.

Update: 2018-10-10 21:45 GMT
சேலம், 


சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வணிச்சம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் காலிக்குடங்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சீராக குடிநீர் வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

காட்டுவளவு மற்றும் சொட்டையன் காடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் சிலர் மேட்டூர் தண்ணீர் வரும் பிரதான குழாயில் திருட்டுத்தனமாக இணைப்பு மூலம் தண்ணீரை உறிஞ்சி கொள்கின்றனர். இதனால் எங்கள் பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வரவில்லை. இது குறித்து கடந்த மாதம் புகார் மனு கொடுத்தோம். ஆனால் மனு குறித்து இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே அங்குள்ள அதிகாரிகள் குடிநீர் திருடுபவர்களிடம் பஞ்சாயத்து பேசி துண்டிக்காமல் மேலும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் விடாமல் இருதரப்பினருக்குள் மோதலை உருவாக்கும் வகையில் செயல்படுகிறார்கள். இதனால் சீராக குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே நாங்கள் கொடுக்கும் மனு மீது நடவடிக்கை எடுப்பதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதைக்கேட்ட போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து சிலர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்