ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல் - கடலூரில் பரபரப்பு

கடலூர் நத்தவெளி சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 124 வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-10 22:06 GMT
கடலூர், 

கடலூர் சரவணாநகரையும், நத்தவெளி சாலையையும் இணைக்கும் வகையில் திட்டம் தயார் செய்யப்பட்டு, அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நத்தவெளி சாலையில் ஒரு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

இந்நிலையில் நத்தவெளி சாலையில் அரிசிபெரியாங்குப்பம் முதல் பாதிரிக்குப்பம் வரை இரு வழியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதன்படி அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 124 வீடுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை யினர் கடந்த மாதம் இறுதியில் சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். அதில் அக்டோபர் 10-ந்தேதி வரை காலஅவகாசம் வழங்குவதாகவும், அதற்குள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் 11-ந்தேதி (அதாவது இன்று) ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் என்றும் கூறப்பட்டது.

இது பற்றி கடந்த 2 நாட்களாக நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதி மக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவித்தனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் மாற்று இடம் வழங்கினால் தான் நாங்கள் இடத்தை காலி செய்வோம் என்று கூறி, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையில் நெடுஞ்சாலைத்துறையினர் விதித்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் அவர்களுக்கு மாற்று இடம் எதுவும் வழங்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தங்கள் வீடுகளை நாளை (இன்று) நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி விடுவார்கள் என்று நினைத்த அவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று கடலூர் - திருவந்திபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கந்தசாமி, தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் மாற்று இடம் வழங்கும் வரை 10 நாட்களுக்கு ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டாம் என்று தாசில்தார் நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணும் வகையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களின் இந்த மறியலால் அந்த பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்