நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடக்கம் - மாநகராட்சி கமிஷனர்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.

Update: 2018-10-10 23:06 GMT
பெங்களூரு,

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி இன்று(அதாவது நேற்று) தொடங்கப்பட்டு உள்ளது. பெங்களூரு நகரில் உள்ள 198 வார்டு அலுவலகங்கள், பெங்களூரு ஒன் அலுவலகம், வருவாய் அதிகாரி மற்றும் உதவி வருவாய் அதிகாரி அலுவலகம் ஆகியவற்றின் வழியாகவும், ஆன்-லைன் வழியாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்குவதற்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்தமாதம் (நவம்பர்) 20-ந் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்பவர்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும். இந்த காலக்கட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களும் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்த தேதிக்கு பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளலாம். ஆனால், அவர்களால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் ஜனவரி மாதம் 4-ந் தேதி வெளியிடப்படும்.

இன்றைய நிலவரப்படி (நேற்று) பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 89 லட்சத்து 57 ஆயிரத்து 64 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 46 லட்சத்து 76 ஆயிரத்து 643 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவார்கள். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 80 ஆயிரத்து 421 ஆக இருக்கிறது.

கடந்த சட்டசபை தேர்தலின்போது பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 91 லட்சத்து 13 ஆயிரத்து 95 வாக்காளர்கள் இருந்தனர். சட்டசபை தேர்தலுக்கு பின்னர் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் சேர்க்கை, நீக்கம் நடைபெற்றது. இந்த பணியின்போது வாக்காளர்களின் பெயர் சேர்ப்பை விட நீக்கங்கள் அதிகமாக இருந்தன. இதனால், பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 89 லட்சத்து 57 ஆயிரத்து 64 ஆக குறைந்துள்ளது.

ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் உள்ள மக்களில் 65 சதவீதம் பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக இருக்க வேண்டும். இதில் கூடினாலோ அல்லது குறைந்தாலோ குளறுபடிகள் நடந்ததாக அர்த்தம். அதன்படி, யஷ்வந்தபுரம், கே.ஆர்.புரம், ராஜராஜேஸ்வரி நகர், எலகங்கா ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், மகாலட்சுமி லே-அவுட், பத்மநாபநகர், ராஜாஜிநகர், ஜெயநகர், காந்தி நகர், பி.டி.எம். லே-அவுட் ஆகிய சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்ைக மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது 8,287 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தற்போது, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. அதாவது வாக்குச்சாவடிகள் 8 ஆயிரத்து 514 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள் விண்ணப்பபடிவம் 6-யை பூர்த்தி செய்து, அதனுடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் முகவரி அடங்கிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் கொடுக்க வேண்டும். 1-1-2019 அன்றுடன் 18 வயது பூர்த்தி ஆகுபவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்