கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையின்றி வைத்திருப்பவர்களுக்கு அபராதம்

திருவாரூர் பகுதிகளில் கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையின்றி வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என திருவாரூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-10-11 22:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் நகராட்சி பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. நகர் பகுதியில் 15,036 குடியிருப்புகளும், 3,925 வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் உள்ளன. இங்கு தேவையற்ற உடைந்த பாத்திரங்கள், தேங்காய் சிரட்டை, கட்டிடங்களுக்கு வெளியே பயன்படுத்தாத டயர், உடைந்த பிளாஸ்டிக் கலன்கள், ஆட்டுக்கல், தகர டப்பாக்கள், ட்ரம்களில் மழை நீர் தேங்கி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது.

வீடு, கடைகள், வணிக நிறுவனங்களை சுற்றி தூய்மையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் அறிவிப்பு வழங்கி உள்ளது. நகராட்சி பணியாளர்கள் வளாகங்களை ஆய்வு செய்ய வரும் போது கொசு உற்பத்தி ஆகும் கலன்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதுபோன்று கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையின்றி வைத்திருப்பவர்கள் மீது பொது சுகாதார விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதுடன், அபராதத்துடன், சேவை கட்டணமும் வசூலிக்கப்படும்.

எனவே பொதுமக்களுக்கு நகராட்சி மேற்கொள்ளும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குடியிருப்பு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மழைநீர் தேங்காதவாறு தூய்மையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்